pic 1
 ஓய்வூதியக் கொடுப்பனவுச் செயல்பாட்டின் போது ஓய்வூதியர்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியர் சமூகத்திடமிருந்து உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் (Life Certificate) பெறும் செயற்பாடு அண்மைக்கால தொழில்நுட்ப உத்திகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒர் உயிரியல் புள்ளிவிபரப் பகுப்பாய்வு (Biometric) திட்டமாக பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் 2019.12.30 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்கள வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலகங்கள் மூலம் உயிர்வாழ்ச் சான்றிதழ் விண்ணப்பங்களை வழங்கி மீண்டும் அதே தகவல்களை பெறுவதற்கான சிக்கலான பாரிய திட்டம் ஒரு எளிய வேகமான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியரும் இந்த புதிய திட்டத்துடன் எளிதாக இணைந்துகொள்ள முடியும். ஓய்வூதியர்களின் கைரேகையை பெறுவதன் மூலம் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தும் இந்த புதிய செயல்முறையின் ஊடாக கடந்த காலத்தில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய மோசடிகளை குறைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2016.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் இயங்கலையில் பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதியர்களின் கைரேகையைப் பயன்படுத்தி உயிர்வாழ் சான்றிதழ்களை வழங்குவதற்கு வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் போது அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இந்த வசதியை விரிவாக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புதிய உயிரியல் புள்ளிவிபரப் பகுப்பாய்வு (Biometric) திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், தினசரி இற்றைப்படுத்தப்படுகின்ற ஓய்வூதியத் திணைக்களத்தின் கடமைச் செயற்பாடுகளிற்கும், ஓய்வூதிய வாழ்க்கையை அனுபவிக்கின்ற ஓய்வூதியர்கள் மற்றும் மரியாதைக்குரிய அரசு ஊழியர்களிற்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள் மற்றும் நோக்கு அகியவற்றிற்கு ஏற்ப ஓய்வூதியத் திணைக்களத்தால் பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு வழங்கப்பட்ட “அனைவருக்கும் ஓய்வூதியம்” என்ற கருத்தையும் அரசு தனியார் துறை உட்பட முழு ஓய்வூதிய திட்டத்தையும் திருத்துவதற்கான முன் மொழிவுத் திட்டத்தையும் செயலாளர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திறைசேரியின் முன்னாள் செயலாளர் திரு.எஸ். சமரதுங்க, ஓய்வூதியத் திணைக்களத்தின் தற்போதைய செயல்முறை குறித்து கருத்து தெரிவிக்கையில் தூசி நிறைந்த அலுவலக சூழல் முற்றிலும் மாறிவிட்டது என்றும் ஓய்வூதியத் திணைக்களத்தை உருவாக்கியதில் தொடர்ந்து பங்கு கொண்ட அனைத்து ஓய்வூதிய பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் தற்போதைய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சேவையை வழங்குகின்றமைக்காக ஓய்வூதிய சமூகத்தின் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பொது நிர்வாகம், உள்நாட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த குறுகிய நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. பி.பி. அபேகோன், அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி சுதர்ம கருணாரத்ன, கோட்டபாயா ஜெயரத்னே, திருமதி பிபிஎஸ் அபேரத்னே , பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.தியாஸ் , மேலதிக பணிப்பாளர் நாயகம் கே.ஆர். பத்மபிரிய மற்றும் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.